ஷா ஆலம், ஜூலை 21- மாநில அரசு கித்தா சிலாங்கூர் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப் படுத்தவுள்ளது. உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு அவசரமற்ற ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் ஒரு புதிய முயற்சியாக இது விளங்குகிறது.
மருத்துவமனைகள் அல்லது அங்கீகாரம் பெற்ற சிகிச்சை மையங்களில் நோயாளிகள் முன்பதிவு பரிசோதனை , சிகிச்சைக்குப் பிந்தையச் சோதனை மற்றும் தொடர் சிகிச்சை பெறுவதில் உதவுவதற்காக இந்த சேவை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
இந்த கித்தா சிலாங்கூர் ஆம்புலன்ஸ் திட்டத்தின் மூலம் மிகவும் திறமையான, முறையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்குவதை மாநில அரசு
நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சியை செயல்படுத்துவதில் மலேசிய செயிண்ட் ஜோன் ஆம்புலன்ஸ் அமைப்பின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு ஒரு முக்கியமான விவேக பங்காளியாக செயல்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்றிரவு செத்தியா ஆலமில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில செயிண்ட் ஜோன் ஆம்புலன்ஸ் மலேசியா தொண்டு அமைப்பின் விருந்தில் பேசிய ஜமாலியா இவ்விவகாரம் பற்றி அறிவித்தார்.
செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனத்தை செயலாக்க பங்காளியாக ஈடுபடுத்துவது, இந்த முயற்சியின் வரம்பை விரிவுபடுத்தும் அதே வேளையில் மாநிலத்தின் ஒட்டுமொத்த சுகாதார ஆதரவு அமைப்பையும் வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
அனுபவம் வாய்ந்த மற்றும் நம்பகமான விவேக பங்காளிகளுடன் பேணப்படும் ஒத்துழைப்பு , பொது சுகாதார சேவையை துறையை வலுப்படுத்துவதில் சிலாங்கூர் மாநில அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.