அங்காரா, ஜூலை 21- காஸாவில் வசிக்கும் பொதுமக்களுக்கு எதிரான போரில் ஆயுதமாக பட்டினியை இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்துவதாகப் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் நேற்று மீண்டும் குற்றம் சாட்டியது.
இஸ்ரேலிய அதிகாரிகள் காஸாவில் பொதுமக்களை பட்டினியால் வாடவிடுகின்றனர். அவர்களில் 10 லட்சம் சிறார்களும் உள்ளனர் என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்தது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான முற்றுகையை அகற்றுவதற்கான அதன் அவசர கோரிக்கையை அது மீண்டும் விடுத்தது. முற்றுகையை நீக்குங்கள். உணவு மற்றும் மருந்துகளை கொண்டு வர ஐ.நா.வை அனுமதியுங்கள் என அது கோரிக்கை விடுத்தது.
பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் உதவி வழங்குவதை அனுமதிப்பதற்கும் அனைத்துலக நிலையிலான சட்டப்பூர்வ கடப்பாடுகள் இருந்தபோதிலும், கடந்த மார்ச் 2 முதல் இஸ்ரேல் காஸாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளது.
வாகன அணிகள் மீது குண்டுவீச்சு நடத்தியது, எல்லைக் கடப்புகளைத் தடுத்தது மற்றும் உதவி விநியோக இடங்களை குறிவைத்தது தாக்கியது போன்றவை பரவலாக கண்டிக்கப்பட்ட கூட்டுத் தண்டனைக்கு உரிய சாத்தியமான போர்க்குற்றங்களாகும்.
டஜன் கணக்கான சிறார்கள் ஏற்கனவே பட்டினி மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைவு காரணமாக இறந்துவிட்டதோடு லட்சக்கணக்கான சிறார்கள் பரவலான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் சுகாதார சேவைகளின் சரிவு காரணமாக ஆபத்தில் உள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு கூறியது.
சனிக்கிழமை மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 136 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் உதவி பெறுவதற்காகக் காத்திருந்த 38 நபர்கள் மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்த மூன்று சிறார்களும் அடங்குவர் பாலஸ்தீன அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.