கோலாலாபூர், ஜூலை 24 – புதிய மக்கள் நலத்திட்ட அறிவிப்பு மூலம் மலேசியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் பாராட்டினார்.

இனம், மதம், பின்னணி என்ற எந்தவொரு பாகுபாடுமின்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மடாணி அரசாங்கத்தின் உறுதியான கடப்பாட்டுக்கு, இதுவே தக்க சான்று என்றார் ரமணன்.
ரொக்க உதவி, இலக்கிடப்பட்ட மானிய முறை, வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்கும் முன்னெடுப்புகள், வரலாறு காணாத வெளிநாட்டு முதலீடுகள் என இந்தியர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரையும் மேம்படுத்த மடாணி அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.
எனவே, சரியான நேரத்தில் சரியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள பிரதமருக்கு மக்கள் சார்பில் நன்றித் தெரிவித்துக் கொள்வதாக ரமணன் கூறினார்.
மக்களின் நல்வாழ்வு, பொருளாதார உயர்வு மற்றும் தேசிய ஒருமைப்பாடே அரசாங்கத்தின் முக்கியக் குறிக்கோள் ஆகும். மக்களின் பேராதரவோடு அக்குறிக்கோள்கள் நிறைவேறும் என ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.