இஸ்தான்புல், ஜூலை 19- காஸா பகுதிக்கு அனைத்துலக ஊடகங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டத் தடையை இஸ்ரேல் உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.
தகவல் கட்டுப்பாடுகள் தவறான தகவல்களைப் பரப்புவதை ஊக்குவிப்பதோடு சாட்சி அறிக்கைகள் மற்றும் மனிதாபிமான நிறுவனங்கள் மீதான நம்பிக்கையையும் சீர்குலைக்கின்றன என்று பிலிப் லாசரினி எச்சரித்தார்.
பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில் அனைத்துலக ஊடகங்கள் மீதான தடை 650 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தாக அனடோலு ஏஜென்சி கூறியது.
அனைத்துலக ஊடக நுழைவு மீதான தடை முடிவுக்கு வர வேண்டும் எனக் கூறிய அவர்,
நிகழ்ந்து வரும் மோதல்களில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டத் தடையானது சாட்சிகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் தரவுகள் மற்றும் நேரடி அறிக்கைகளை மறுத்து தவறான தகவல் பிரச்சாரத்திற்கு வழி வகுக்கிறது என்று அவர் கூறினார்.