இஸ்லாமபாத், ஜூலை 18- கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலம் முழுவதும் கடும் மழை பெய்ததைத் தொடர்ந்து ஒரே நாளில் 63 பேர் இறந்ததோடு குறைந்தது 300 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து பெய்துவரும் கடுமையான மழையினால் நாடு தழுவிய நிலையில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கட்டிடங்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகின. மேலும், பலவீனமான வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததால் பெரும்பாலான மரணங்கள் ஏற்பட்டன.
நாட்டின் தென் பகுதியில் வெள்ளத்தினால் ஆற்றோரங்களில் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து குடியிருப்பாளர்களை படகின் உதவியோடு மீட்பு குழுவினர் வெளியேற்றினர்.