ஷா ஆலம், மே 21 -- யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறக்கட்டளை கடந்த பத்தாண்டுகளில் இளம் தொழில்முனைவோருக்கு 32 கோடியே 60 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான தொகையை வர்த்தக கடனுதவியாக வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் வழி 34,000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் குறு தொழில்களிலிருந்து தொழில் முனைவோர்களாக மாறுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஹிஜ்ரா சிலாங்கூர் தொடங்கப்பட்டதிலிருந்து வழங்கப்பட்ட மொத்த நிதியான 86.3 கோடி வெள்ளியில் இந்தத் தொகை 37.8 சதவீதமாகும்.
இன்றுவரை, மாநிலம் முழுவதும் அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த 61,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் 92,000க்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் பயனடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளானில் உள்ள கே.எஸ்.எல். எஸ்பிளனேட் மாலில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலான தேசிய இளைஞர் தினம் 2025 நிகழ்வின் போது இந்த புதிய மைல்கல் சாதனை கொண்டாடப்பட்டது. ஹிஜ்ரா சிலாங்கூரின் 10 ஆண்டுகால சிறப்பு சாதனையின் மூன்றாவது நிறுத்தமாகவும் இது விளங்குகிறது.
இந்த நிகழ்வில், ஹிஜ்ரா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மெரியா ஹம்சாவுடன் இணைந்து மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மீன்வளர்ப்பு, கேட்டரிங், வாகன பராமரிப்பு, திருமண திட்டமிடல் மற்றும் சில்லறை விற்பனை உள்ளிட்ட ஐந்து சிறந்த இளைஞர் தொழில்முனைவோருக்கு விருதுகளை வழங்கினார்.
விருது பெற்றவர்களில் சென் வெய் காங், கே. குண பிரசாத், முகமது இஸ்மத் ஜைனுடின், முகமது ஹைருல் மின்தானி மற்றும் நூர் இஸ்ஸாதி முகமது சலைனி ஆகியோரும் அடங்குவர். விருது பெற்ற ஒவ்வொருவரும் ஹிஜ்ரா சிலாங்கூரின் நிதியளிப்புத் திட்டங்களின் ஆதரவுடன் பெற்ற வளர்ச்சியின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஐந்து சிறந்த இளம் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம், தொழில்முனைவோரியல் துறையில் இளைஞர்களுக்கு விரிவான நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலுடன் அதிகாரம் அளிக்க ஹிஜ்ரா சிலாங்கூர் மூலம் மாநில அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கிறது என்று ஹிஜ்ரா சிலாங்கூர் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.