குஜராத், 14 ஏப்ரல் -- அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை 90 நாள்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கும் நடவடிக்கை இந்தியாவுக்கு நன்மை அளிக்கும் என்று இந்திய பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர்.
மேலும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத்தில் ஏற்பட்டிக்கும் வெற்றிடத்தை நிரப்ப இந்தியா முற்பட வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
90 நாள்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் தற்காலிக இடைநிறுத்தம், அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கு வழிவகுக்கும் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் தலைமை இயக்குநர் அஜய் சஹாய் கூறுகிறார்.
இந்த கூட்டமைப்பின் 37,000 ஏற்றுமதியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
''இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், பி.டி.ஏ. பேச்சுவார்த்தை மேற்கொள்ள எங்களுக்கு 90 நாள் காலக்கெடு உள்ளது. மேலும் அமெரிக்காவுடன் இம்மாதிரியான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா என்பதால், முன்கூட்டியே பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் நன்மையும் எங்களிடம் உள்ளது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, யு.எஸ்.டி.ஆர் குழுவுடனும் எங்களுக்கு இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் உள்ளன. அநேகமாக, நாங்கள் அந்த திசையில் நகர்கிறோம், மேலும் அமெரிக்கா 90 நாள் கால அவகாசத்தை வழங்கியுள்ளதால், சில நாடுகளுக்கு சில நிவாரணங்களை வழங்குவதையும் அமெரிக்கா பரிசீலித்துக்கொண்டிருக்கலாம்,'' என்று அவர் கூறினார்.
பிப்ரவரி தொடங்கி அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், பி.டி.ஏ-வின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இந்தியா முயற்சித்து வருகிறது.
இவ்வாண்டில் பி.டி.ஏ இறுதி செய்யப்பட்டால், 2030-ஆம் ஆண்டுக்குள் இருவழி வர்த்தகத்தின் வழி 50,000 கோடி அமெரிக்க டாலரை எட்ட இயலும் என்று இந்தியா கணித்திருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடான அமெரிக்கா, கடந்த வாரம் இந்தியா மீது 26 விழுக்காடு வரிகளை விதித்தது.
-- பெர்னாமா








