ஷா ஆலம், மார்ச். 1- மருத்துவத் துறைக்கும் மக்களுக்கும் இடையே சிறப்பான உறவை உருவாக்குவதில் பார்வையாளர் வாரிய உறுப்பினர்கள் (BOV) முக்கியப் பங்காற்ற வேண்டும் என மாநில அரசு விரும்புகிறது.
சுகாதாரத் துறையின் சூழியல் முறையை மக்கள் முழுமையாக அறிந்திருப்பதை உறுதி செய்யக் கூடிய மிகப்பெரிய பொறுப்பு அந்த வாரிய உறுப்பினர்களுக்கு உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மருத்துவமனை, கிளினிக் மற்றும் சமூகத்திற்கிடையே நல்லிணக்கத்தை மருத்துவமனை பார்வையாளர் வாரிய உறுப்பினர்கள் ஏற்படுத்த வேண்டும். நாம் அவ்வாறு செய்யாவிட்டால் எவ்வளவு நவீன மருத்துவமனையாக இருந்தாலும் விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என்றார் அவர்.
தன்னார்வலர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை ஒன்றிணைக்கும் மையப் புள்ளியாக நீங்கள் விளங்குகிறீர்கள். மக்களுக்கு புரிந்துணர்வை ஏற்படுத்தும் உந்து சக்தியாகவும் நீங்கள் இருக்கிறீர்கள் என்று அவர் மேலும் சொன்னார்.
இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தின் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற மருத்துவமனை பார்வையாளர் வாரிய உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்ற போது அவர் இவ்வாறு குறிப்ட்டார்.
இந்த நிகழ்வில் சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் மற்றும் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் உம்மி கல்தோம் சம்சுடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மூன்றாண்டு காலத் தவணைக்கு மொத்தம் 260 பார்வையாளர் வாரிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜமாலியா தெரிவித்தார்.