கோலாலம்பூர், பிப். 15 - இரு நாடுகளின் நலனுக்காக அதிகரிக்கக்கூடிய ஒத்துழைப்பின் சாத்தியமான அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கியூபா வெளியுறவு அமைச்சர் புருனோ எட்வர்டோ ரோட்ரிக்ஸ் பாரில்லாவுடன் நேற்று சந்திப்பு நடத்தினார்.
கடந்த 1975ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய மலேசியாவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவையொட்டி இந்த சந்திப்பு நடைபெற்றதாக அன்வார் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
ஹலால் தொழில் துறை, சுகாதாரம், முதலீடு மற்றும் வர்த்தகம், ஆசியான், பிரிக்ஸ் மற்றும் காஸாவின் நிலவரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் விவாதிக்கவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இச்சந்திப்பின் போது நமது நீண்டகால அரசதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த மலேசியாவிற்கு வருகை தருமாறு கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்-கனெலுக்கு அழைப்பு விடுத்தேன் என்று அவர் கூறினார்.
நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு கடந்த புதன்கிழமை பாரில்லா மலேசியா வந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி வெளியுறவு அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பாரில்லா மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
— பெர்னாமா