சுபாங் ஜெயா, நவ. 3- சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு 2025
இயக்கத்தை முன்னிட்டு 80 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்க்க சிலாங்கூர்
திட்டமிட்டுள்ளது. மாநிலத்திற்கு வரும் சுற்றுப்பயணிகளில் 40 விழுக்காட்டினர் வெளிநாட்டினராக இருப்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து ஊடகத் தளங்களையும் பயன்படுத்தி சிலாங்கூரிலுள்ள
கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் டூரிசம் சிலாங்கூர் தீவிரமாக ஈடுபட்டு
வருவதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங்
சுயி லிம் கூறினார்.
சீனா, இந்தியா, இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளில் சுற்றுலா
ஊக்குவிப்பு பிரசாரம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள்
மேற்கொண்டுள்ளோம். சுற்றுலாவை மிகச்சிறப்பான நிலைக்கு
உயர்த்துவதே எங்களின் நோக்கமாகும் என அவர் சொன்னார்.
பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய எண்ணற்றச் சுற்றுலாத் தளங்களை
சிலாங்கூ கொண்டுள்ளது. சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டை
முன்னிட்டு பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். இந்நாட்டிற்கு
வருகை புரியும் சுற்றுப்பயணிகள் மறக்கவியலா நினைவுகளுடன் தாயகம்
செல்வதற்குரிய வாய்ப்பினை இவை யாவும் ஏற்படுத்தும் என்றர் அவர்.
நேற்று இங்குள்ள சன்வே பிரமிட்டில் 2024 சிலாங்கூர் சுற்றுலா கண்காட்சி
மற்றும் 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு சின்னம் அறிமுக
நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கலாசாரத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷாவும் கலந்து கொண்டார்.
இதனிடையே, 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டை
முன்னிட்டு பல்வேறு கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாக பொர்ஹான் அமான் ஷா கூறினார்.








