சீக்கியர்களுக்கு எதிரான சதித்திட்டத்தில் அமைச்சரைத் தொடர்புப் படுத்துவதா? கனடாவுக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி, நவ.3 - கனடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்டத்தில் தங்கள் நாட்டு உள்துறை அமைச்சரை தொடர்புபடுத்தியதற்காக கனடாவிடம் தாங்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு கூறியது.
இந்திய தூதரகப் பணியாளர்கள் சிலரை அந்நாடு கண்காணித்தது வருவதாகவும் அமைச்சு குற்றம் சாட்டியது.
எனினும் இவ்விவகாரம் தொடர்பில் கனடாவின் உலகளாவிய விவகாரத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை.
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை மற்றும் மிரட்டல் பிரச்சாரத்தின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாம் உயர்நிலைத் தலைவர் அமித் ஷா இருப்பதாக கனடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியதாக அக்டோபர் மாதம் வாஷிங்டன் போஸ்ட் கூறியிருந்தது.
இந்த சதித்திட்டங்களுக்குப் பின்னால் அமித் ஷா இருப்பதாக கனடிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட அபத்தமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று இந்தியக் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரண்டீர் ஜெய்ஸ்வால் புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாக அரசாங்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கனடாவின் "அடிப்படையற்ற சூழ்ச்சி" என வர்ணித்த ஜெய்ஸ்வால், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு கடுமையான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்றார்.
சீக்கிய பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 இல் கனடாவில் கொல்லப்பட்டதிலும் அங்குள்ள மற்ற அதிருப்தியாளர்கள் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதிலும் தங்களுக்கு பங்கிருப்பதாக கூறப்படுவதை இந்தியா மறுத்துள்ளது. இந்த சர்ச்சை இரு நாடுகளிலும் உள்ள தூதர்களை வெளியேற்ற வழிவகுத்தது.








