கிள்ளான், அக். 27- இவ்வாண்டில் 220 கோடி வெள்ளி வருமானத்தை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கையும் தாண்டி இம்மாதம் வரை 221 கோடியே 80 லட்சம் வெள்ளியை மாநில அரசு வருமானமாகப் பதிவு செய்துள்ளது.
நேர்மறையான பொருளாதார மேம்பாடு மற்றும் அதிகரித்து வரும் முதலீடுகள் இந்த வருமான உயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்கியதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
புதிய பகுதிகள் திறப்பு, மேம்பாடு, தொழிற்சாலைகள், தரவு மையம், சிறந்த அடைவுநிலை மையங்கள் போன்றவை வளர்ச்சிக்கான உந்து சக்தியாக விளங்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டிற்கான வருமான இலக்கான 220 கோடி வெள்ளியை தாண்டி இதுவரை 221.8 கோடி வெள்ளியை பதிவு செய்துள்ளோம். இது நிர்ணயிக்கப்பட்டத் தொகையைக் காட்டிலும் 1 கோடியே 80 லட்சம் வெள்ளி அதிகமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட நாம் அதிக வருமானத்தை பதிவு செய்வது இது நான்காவது ஆண்டாகும். கடந்த 2023ஆம் ஆண்டு 270 கோடி வெள்ளியையும் 2022 ஆம் ஆண்டு 250 கோடி வெள்ளியையும் 2021ஆம் ஆண்டு 230 கோடி வெள்ளியையும் வருமானமாகப் பதிவு செய்தோம் என்றார் அவர்.
எஞ்சிய இரு மாதங்களில் நாம் மேலும் அதிக வருமானத்தை பதிவு செய்து வருகிறோம். பெரும்பாலான வருமானங்கள் நிலம் சம்பந்தப்பட்ட வையாக உள்ளன. சிலர் பிரீமியத் தொகையை இவ்வாண்டு செலுத்துவார்கள். சிலர் அடுத்தாண்டு செலுத்துவார்கள் என அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் நடைபெற்ற மாநில அரசின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜூன் மாதம் வரை மாநில அரசு 3,500 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்துள்ள வேளையில் ஆண்டு இறுதிக்குள் 5,000 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கும் இலக்கை அடைய முடியும் என நம்பிக்கையை தாங்கள் கொண்டுள்ளதாக அமிருடின் மேலும் சொன்னார்.








