ஷா ஆலம், அக். 25- பெரேனாங்கிலுள்ள மக்கோத்தா தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள வடிகால்களில் நீர் நீல வண்ணத்தில் இருப்பது குறித்து லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
தகவல் அறிந்து நேற்றிரவு 10.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அந்த மாசடைந்த நீர் சுங்கை காபுல் மற்றும் சுங்கை பெரேனாங் ஆற்றில் கலக்காமலிருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
லுவாஸ் அதிகாரிகளின் சோதனையில் அவ்விரு ஆறுகளிலும் அந்த நீல வண்ண நீர் கலக்கவில்லை என்பது கண்டறியப்பட்டதோடு ஆற்று நீரும் எந்த வாடையும் இன்றி வழக்கமான நிலையில் இருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் இரண்டு மூட்டை ஏசி எக்கிடிவேட்டட் கார்பன் எனப்படும் கரித்துண்டுகளை வடிகால்களில் வைத்ததோடு சுங்கை காபுல் ஆற்றிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர் என்று லுவாஸ் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காஜாங் நகராண்மைக் கழகம் மற்றும் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த சோதனையை தாங்கள் மேற்கொண்டதாகவும் லுவாஸ் தெரிவித்தது.
நேற்றிரவு தொடங்கி சம்பவ இடத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஆறுகளில் நீரின் தரம் கட்டுப்பாட்டில் உள்ளதோடு வழக்கத்திற்கு மாறான வாடையும் நீரில் காணப்படவில்லை என அது தெளிவுபடுத்தியது.








