MEDIA STATEMENT

கண்மூடித்தனமான தாக்குதல் வேண்டாம்- சமுதாய உயர்வுக்கு ஆக்ககரமான கருத்துகளை வழங்குவீர்- குணராஜ் வேண்டுகோள்

25 அக்டோபர் 2024, 10:04 AM
கண்மூடித்தனமான தாக்குதல் வேண்டாம்- சமுதாய உயர்வுக்கு ஆக்ககரமான கருத்துகளை வழங்குவீர்- குணராஜ் வேண்டுகோள்

ஷா ஆலம், அக். 25- அண்மையில் அறிவிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூகம் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனக் கூறி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நடத்தப்படும் கண்மூடித்தமான தாக்குதல்களும் குறைகூறல்களும் சமூகத்தின் மேம்பாட்டிற்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை என்று செந்தோசா சட்டமன்ற  உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

அரசாங்கம் மித்ரா மற்றும் தெக்குன் ஆகிய திட்டங்களின் வாயிலாக மட்டுமின்றி இதர அமைச்சுகளின் மூலமாகவும் இந்திய சமுகத்திற்கு பல உதவிகளை வழங்கி வருகிறது என்று அவர் சொன்னார்.

இந்திய சமூகத்தின் நலன் காப்பதற்காக மேலும் அதிகமான நிதி ஒதுக்கீடு தேவை என்றால் விமர்சனம் செய்யும் தரப்பினர் முறையாகவும் தக்க ஆதாரங்களோடும் தங்களின் குறைகூறல்களை முன்வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மித்ரா மற்றும் தெக்குன் வாயிலாக மட்டுமே இந்திய சமூகத்திற்கு உதவி கிடைப்பதாக சில தரப்பினர் கூறி வருகின்றனர். இத்தகைய குறைகூறல்களை முன்வைப்போர் முழுமையான  தகவல்கள் தெரியாதவர்களாக அல்லது உண்மையை அறிந்தும் அதனை மறைப்பவர்களாக இருக்கக் கூடும்.

கல்வி, வர்த்தகம், சுகாதாரம், வீடமைப்பு மற்றும் சமூக நலன் உள்ளிட்ட துறைகளில் இந்திய சமூகம் உள்பட நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பலன் பெறுவதற்காக அரசாங்கம் பல திட்டங்களையும் நிதியுதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

அத்திட்டங்கள் வாயிலாக எவ்வாறு பயன் பெறலாம் என்பதை நாம்தான் அறிந்து கொள்ள வேண்டும். இதுதான் நாம் முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழியாகும். ஆனால் விமர்சனம் செய்யும் தரப்பினர் வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதி மீது மட்டும் கவனம் செலுத்தி இதர பகுதியை கவனிக்காது விட்டு விட்டனர் என்று குணராஜ் சொன்னார்.

விமர்சனங்களை முன்வைப்போர் வரம்பு மீறி செயல்படுவதோடு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் அரசாங்கத்தையும் தனிப்பட்ட முறையில் தாக்குகின்றனர். இது போன்ற மரியாதைக் குறைவான செயல்கள் சமூகத்திற்கு எந்த பயனையும் கொண்டு வரப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்திய சமூகத்திற்கு அதிக மானியத்தை பெறுவது அவர்களின் நோக்கமாக இருக்குமானால் தலைவர்களுக்கு எதிரான கடுமையானத் தாக்குதல்கள்  அந்த நோக்கம் நிறைவேறுவதற்கு எந்த வகையில் உதவப் போகிறது என்று அவர் கேள்வியெழுப்பினார்.

இந்திய சமுகத்தின் நலனுக்காக பாடுபடுவது அவர்கள் உண்மையில் பாடுபடுபவர்களாக இருந்தால்  அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் நியாயமானவையாக இருக்கும் அதேவேளையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக ஆக்ககரமான கருத்துகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என அவர் சொன்னார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.