(ஆர்.ராஜா)
கிள்ளான், அக். 25 இம்மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்பட விருக்கும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள தாமான் செந்தோசாவில்
சிலாங்கூர் சிறு தொழில் மற்றும் நடுத்தர வர்த்தக இயக்கம் தீபாவளி
சந்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஜாலான் டத்தோ சஹாபுடின் 28 இல் நடைபெறும் இந்த தீபாவளி
சந்தையில் 45 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த
கடைகளில் கடந்த 22ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 30ஆம் தேதி
வரை விற்பனை நடைபெறும்.
இந்த தீபாவளி சந்தையில் தீபாவளி உடைகள், பலகாரங்கள், வீட்டு
அலங்காரப் பொருட்கள், வண்ண விளக்குகள், பட்டாசுகள் உள்ளிட்ட
பொருட்களை வர்த்தகர்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இந்த தீபாவளி சந்தையை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்
ஜி.குணராஜ் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த தீபாவளி சந்தைக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த சிலாங்கூர்
சிறு தொழில் மற்றும் நடுத்தர வர்த்தக சங்கப் பொறுப்பாளர்களுக்கு
பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், இது போன்ற பெருநாள்
காலங்களில் பொதுமக்கள் உபரி வருமானம் பெறுவதற்குரிய வாய்ப்பினை
இத்தகைய சந்தைகள் ஏற்படுத்தித் தருகின்றன என்றார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை சமாளிப்பதற்கு ஏதுவாக
நமது சமூகத்தினர் இத்தகைய வர்த்தக நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு
காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.








