(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 20- தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் நிதிச் சுமையை குறைப்பதில் மாநில அரசின் இலவச ஷோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டு திட்டம் துணை புரியும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்தகைய உதவிகள் சிறிய அளவில் பயன் தரக்கூடியதாக இருந்தாலும் இந்திய சமூகம் ஏழ்மையில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளை தாங்கள், மாநில அரசின் வாயிலாக தொடர்ந்து மேற்கொள்வதாக அவர் சொன்னார்.
மாநில அரசின் தீபாவளி ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் கோத்தா கெமுனிங் தொகுதிக்கு 450 பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்பட்ட வேளையில் அவற்றைப் பெறுவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தொகுதி மக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றன என அவர் தெரிவித்தார்.
அவற்றில் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு அந்த 450 பற்றுச் சீட்டுகளும் பகிர்ந்தளிக்கப்பட்ட வேளையில் இத்திட்டத்தில் விடுபட்ட மற்றவர்களுக்கு உணவு கூடைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மடாணி அரசாங்கத்தின் வாயிலாக 100 உணவுக் கூடைகள் தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளன. இது தவிர டிஜிட்டல் அமைச்சர் கோவிந்த் சிங் டியோவிடம் மேலும் 100 உணவுக் கூடைகளை கேட்டுள்ளேன். இந்த உணவுக் கூடைகள் அனைத்தும் விடுபட்ட விண்ணப்பதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு எஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை கோத்தா கெமுனிங் தொகுதியில் நடத்துவதற்கு தாங்கள் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், கூடிய விரைவில் புக்கிட் கெமுனிங் வட்டாரத்தில் அந்த மலிவு விற்பனை நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.








