ஷா ஆலம், அக். 18- இனிப்பு பானங்களுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 40 காசு என்ற அளவில் வரும் ஜனவரி முதல் தேதி தொடங்கி கட்டங் கட்டமாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தொற்றா நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக சீனி விளங்கி வரும் அதேவேளையில் உடல் பருமன் பிரச்சினைக்கும் தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த கூடுதல் கலால் வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் தொகை நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மற்றும் அந்நோய்க்கான மருந்து விநியோகத்தை அதிகரிப்பது போன்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், சிறுநீரக பாதிப்பின் இறுதிக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்கும் பெல்டா குடியேற்றப் பகுதிகளில் உள்ள டயாலிசிஸ் மையங்களை தரம் உயர்த்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
இது தவிர, தேசிய விளையாட்டு தினம் உள்பட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு புத்துயிரூட்டுவதற்காக 2.7 கோடி வெள்ளி ஒதுக்கப்படுவதாக இன்று நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.
நோய்க் கண்டறியும் சோதனைகள். மருத்துவச் சோதனை உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிப்பது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.