(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 8- கனமழை பெய்யும் சமயங்களில் வெள்ள நீர் விரைவாக ஆற்றில் கலப்பதற்கு ஏதுவாக செந்தோசா தொகுதியில் வடிகால்கள் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.
வடிகால் முறை சீராக இல்லாத காரணத்தால் இப்பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதாகக் கூறிய அவர், இப்பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காணும் வகையில் கிள்ளான் அரச மாநகர் மன்றமும் வடிகால் மற்றும் நீர்ப்பாசன துறையும் (ஜே.பி.எஸ்.) விரிவான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இத்தகைய ஆய்வினை சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டாலும் அந்த ஆய்வில் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பங்கேற்பதற்கு அரிய வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.
கடந்த ஐந்தாண்டுகளாக நான் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வந்த போதிலும் பொதுமக்களின் கருத்துகளை பிரதிபலிப்பதற்கு ஏதுவாக அந்த ஆய்வில் நான் உள்ளடக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் வெள்ளம் ஏற்படும் போது சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் குறைகூறலுக்கு ஆளாகிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் பொறுப்பாளியாக இருந்தாலும் இவ்விவகாரத்தில் அரச மாநகர் மன்றம் மற்றும் ஜே.பி.எஸ். தரப்பினரின் நடவடிக்கைகள் என்ன என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று பெய்த அடைமழை காரணமாக திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கோத்தா ராஜா, தாமான் சாகாவில் கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனத்தினர் மேற்கொண்டு வரும் வடிகால் துப்புரவுப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக பெய்த பலத்த மழையின் காரணமாக இங்குள்ள கால்வாய்களில் நீர் நிரம்பியதாகக் கூறிய குணராஜ், மழை நீர் ஆற்றில் விரைந்து கலப்பதற்கு சீரான வடிகால் முறை இல்லாத காரணத்தால் தாமான் சாகா, தாமான் மெனாரா மாஜூ, தாமான் சௌஜானா ஜாத்தி, தாமான் கிளாங் ஜெயா, புக்கிட் திங்கி, செந்தோசா ஆகிய இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என்றார்.
இங்கு கால்வாய்கள் பெரிதாக இருந்தாலும் பல்வேறு தடைகள் காரணமாக மழை நீர் விரைந்து வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. ஜாலான் ராஜா நோங் தொடங்கி கம்போங் சீடேக் வரையிலான 500 மீட்டர் பகுதியில் கால்வாய் மூடப்பட்டு நீரோட்டம் தடை பட்டுள்ளது. ஆகவே, இப்பிரச்னைக்கு உரிய தீர்வை காணும்படி மாநகர் மன்றம் மற்றும் வடிகால் நீர் பாசனத் துறையை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.








