காஜாங், அக். 4: மலேசிய வாகனமோட்டும் உரிம மாற்றத் திட்டத்தின் கீழ் (எல்.எம்.எம்.) பி1 மற்றும் பி2 பிரிவு லைசென்ஸ்களை பி பிரிவுக்கு (அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள்) மாற்றுவற்கு விண்ணப்பிக்கும் முன் நிலுவையில் உள்ள போக்குவரத்து சம்மன்களைச் முதலில் சரிபார்த்து அவற்றுக்குத் தீர்வு காணுமாறு பொதுமக்களை சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) அறிவுறுத்துகிறது.
சம்பந்தப்பட்ட அத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகளில் தளர்வு வழங்கப்பட்டாலும் நிலுவையில் உள்ள ஜே.பி.ஜே. மற்றும் போலீஸ் சம்மன்கள் முதலில் தீர்க்க வேண்டும் என்று ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார்.
பத்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக பி2 பிரிவு லைசென்ஸ் பெற்றவர்கள், கருப்புப் பட்டியலில் இடம் பெறாதவர்கள் அல்லது சம்மன்கள் நிலுவையில் இல்லாதவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
ஆயினும், 10 அல்லது அதற்கு மேற்பட்ட வருடத்திற்கான நிபந்தனையை பூர்த்தி செய்திருந்தாலும் அவர்கள் முதலில் நிலுவையில் உள்ள சம்மன்களைச் சரிபார்த்து அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.
இன்று இங்குள்ள ஜாலான் பாங்கி லாமா, ஐந்தாவது மைலில் நடைபெற்ற சிறப்பு வாகன சோதனை நடவடிக்கையின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
பொது மக்கள் My JPJ செயலி, ஜே.பி.ஜே. முகப்பிடம் மற்றும் ஜே.பி.ஜே. இணையதளத்தில் சம்மன்கள் தொடர்பில் சரிபார்ப்புகளைச் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.








