ஷா ஆலம், செப். 28- பந்திங் அடுக்குச் சாலை சந்திப்பு முதல் தென் கிள்ளான் விரைவுச் சாலை (எஸ்.கே.வி.இ.) அடுக்குச் சாலை சந்திப்பு வரையிலான கடற்கரையோர நெடுஞ்சாலையின் (டபள்யூ.சி.இ.) முதல் பிரிவில் வரும் செப்டம்பர் 30 இரவு நள்ளிரவு மணி 12.01 முதல் டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.
பொதுப் பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி திறப்பு விழா கண்டது முதல் இந்த 12.5 கிலோ மீட்டர் நீள பகுதியில் டோல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என் அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த நெடுஞ்சாலையின் முதல் பிரிவில் டச் அண்ட் கோ, ஸ்மார்ட் டேக் மற்றும் ஆர்.எப்.ஐ.டி. போன்ற மின்னியல் டோல் கட்டண வசூலிப்பு முறைகள் பயன்படுத்தப்படும் என்று அது குறிப்பிட்டது.
டோல் கட்டணத்தை நிர்ணயிப்பதில் எஸ்.கே.வி.இ. நெடுஞ்சாலையின் இணைப்பு உள்ளிட்ட பகுதிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
வாகனப் பிரிவு மற்றும் பயணத் தொலைவைப் பொறுத்து வெ.1.70 முதல் வெ.16.11 வரை இப்பகுதியில் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலாங்கூரின் பந்திங் நகரையும் பேராக் மாநிலத்தின் தைப்பிங்கையும் (சங்காட் ஜெரிங்) இணைக்கும் இந்த 233 கிலோ மீட்டர் டபள்யு.சி.இ. நெடுஞ்சாலை நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் ஒன்றாக விளங்குகிறது.








