கோலாலம்பூர், செப். 25- வழக்கறிஞர் நிறுவனம் ஒன்றின் மோசடி வலையில் சிக்கி 19 லட்சம் வெள்ளியை தாம் இழந்துள்ளதாக நிறுவன இயக்குனர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
தனக்கு எதிரான நான்கு சிவில் வழக்குகளைக் கையாள்வதற்காக வழக்கறிஞர் நிறுவனம் ஒன்றைத் தாம் நியமித்ததாக அந்த 47 வயது பெண்மணி தனது புகாரில் கூறியுள்ளார் என்று புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.
இதற்கிடையே, சட்டரீதியான தீர்வு காணப்படும் வரை தனக்குச் சொந்தமான சொத்துகளை விற்பதற்கு தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் கடந்த 2023ஆம் ஆண்டு பிறப்பித்ததாக அந்த இயக்குநர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என அவர் சொன்னார்.
இந்நிலையில் சிவில் வழக்கு முடியும் வரை தனக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் சேமிப்பு பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஏதுவாக அவற்றை தனது பெயருக்கு மாற்றும்படி அந்த வழக்கறிஞர் நிறுவனத்தின் உரிமையாளரான சந்தேகப் பேர்வழி அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
சந்தேகப் பேர்வழியின் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி 19 லட்சம் வெள்ளி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்கள் அந்த வழக்கறிஞரிடம் ஒப்படைத்துள்ளார் என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அந்த வழக்கறிஞரின் சேவையை இனியும் பயன்படுத்துவதில்லை என கடந்தாண்டு இறுதியில் முடிவெடுத்த அந்த பெண்மணி தனக்குச் சொந்தமான ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திரும்ப ஒப்படைக்கும்படி அந்த வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார். எனினும் பல காரணங்களைக் கூறி அந்த வழக்கறிஞர் அந்த சொத்துக்களை ஒப்படைக்காமல் இழுத்தடித்துள்ளார்.
தனக்குச் சொந்தமான சொத்துக்களை அந்த வழக்கறிஞர் மோசடி செய்ததாக சந்தேகம் கொண்ட அப்பெண் இதன் தொடர்பில் கடந்த 11ஆம் தேதி போலீசில் புகார் செய்தார் என்றார் அவர்.
இந்த புகார் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








