புத்ராஜெயா, செப். 25- நாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் நலன்களை ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்தது கிடையாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறினார்.
இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட கல்வி, வழிபாட்டுத் தலங்கள், வேலைவாய்ப்புகள் உட்பட அனைத்து முக்கிய அம்சங்களும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தியர்களைப் பிரதிநிதிக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது இச்செய்தியை நான் உறுதிப்படுத்தியுள்ளேன். அதேசமயம், அனைத்து இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவமும் இச்சந்திப்பின் போது எடுத்துரைத்தேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த பதிவு அவரின் முகநூல் பக்கத்தில் தமிழ் மொழியில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவுக்கூடை அன்பளிப்புக்காக சுமார் 15 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளத் தகவலையும் பிரதமர் இப்பதிவில் வெளியிட்டுள்ளார்.
மேலும், கெடா, ஜொகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களில் இந்து மயானம் அல்லது மின்சுடலைகளை நிர்மாணிப்பதற்காக 2 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய சமூகத்தின் நலனை உறுதி செய்யும் வகையில், எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், முந்தைய வரவுசெலவுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில திட்டங்கள் தொடரப்படவுள்ளன என்று அவர் சொன்னார்.
முன்னதாக, அரசாங்கம் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவுக்கு (மித்ரா) குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது. மேலும், தேசிய தொழில்முனைவோர்களுக்கான பொருளாதார நிதி (தெக்குன்), அமானா இக்தியார் மலேசியா ஆகியவற்றின் வழி இந்திய சமூகத்திற்காக சில நிதி ஒதுக்கீடுகளையும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில், எதிர்காலத்தில் நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார நிலை தொடர்ந்து உயர்த்தப்படும் என்று நான் பெரிதும் நம்புகிறேன் என பிரதமர் தெரிவித்தார்.








