ஷா ஆலம், செப். 1- செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டங்களில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.
இம்முறை தேசிய தினக் கொண்டாட்டம் சற்று மாறுபட்ட முறையில் அதாவது தாமான் கிளாங் ஜெயா, தாமான் மஸ்னா, தாமான் காண்டிஸ் பெர்மாய், தாமான் சவௌஜானா, பங்சாபுரி பல்மா பொட்டானிக் ஆகிய ஐந்து இடங்களில் நடத்தப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் கூறினார்.
ஆறாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மெர்டேக்கா தினக் கொண்டாட்டம் தொகுதியின் ஐந்து இடங்களில் ஏக காலத்தில் நடத்தப்பட்டதன் மூலம் இம்முறை கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக விளங்கியது என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டுப் பற்றை விதைப்பதன் மூலம் சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வை தொடர்ந்து நடத்த தாங்கள் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் சைக்கிள் அலங்காரம் மற்றும் சிறார்களுக்கான போட்டிகள் உள்பட பல்வேறு அங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன என்று சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.
பல்வேறு பின்னணிகளைக் கொண்டிருந்த போதும் நாட்டு மக்கள் தொடர்ந்து ஐக்கியத்தைப் பேணி வர வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு சமூகத் தொடர்பு அதிகாரியுமான அவர் வலியுறுத்தினார்.








