ஷா ஆலம், ஆக. 17 - பந்திங், ஜாலான் தோமானில் இன்று அதிகாலை நான்கு வரிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்.
தங்கள் வீட்டின் பின்புறத்தில் சிக்கியிருந்த அக்குடும்பத்தினரை பொதுமக்கள் காயமின்றி பாதுகாப்பாக மீட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் (நடவடிக்கை) அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
தீப்பற்றிய வீட்டிற்குள் நுழைய முயன்றபோது மீட்பு பணியில் ஈடுபட்ட ஒருவர் கண்ணாடி துண்டுகள் குத்தி காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதிகாலை 1.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வாகனங்களும் எரிந்து நாசமாயின. பந்திங், கேஎல்ஐஏ மற்றும் தெலுக் பங்ளிமா காராங் நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்








