கோலாலம்பூர், ஆக 17 - அம்பாங், தாமான் செம்பாக்காவில் உள்ள நடிகை ஒருவரின் வீட்டில் நகைகளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் அவரின் தனிப்பட்ட உதவியாளர் கடந்த புதன்கிழமை கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையக வளாகத்தில் கைது செய்யப் பட்டார்.
அந்த பெண் விசாரணைக்காக வரும் திங்கட்கிழமை வரை நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட துணை காவல் துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் நஸ்ருள் எக்ராம் அபு சாரே கூறினார்.
கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி வீட்டில் இருந்த போது தனது தங்க நெக்லஸ் காணாமல் போனதைப் புகார்தாரர் கண்டுபிடித்தார். இது குறித்து அவர் தனது தனிப்பட்ட உதவியாளரிடம் விசாரித்தார். ஆனால், அந்த பெண் நகையை எடுத்தை மறுத்துள்ளார் என அவர் தெரிவித்தார்.
அந்த நடிகை தனது கைப்பையை மேலும் சோதனை செய்த போது அதிலிருந்த தனது குழந்தைக்கு சொந்தமான இரண்டு தங்க வளையல்கள் மற்றும் ஒரு தங்க நெக்லஸ் காணாமல் போனதை கண்டுபிடித்தார்.
தனது உதவியாளர் நகைகளைத் திருடி இருக்கக் கூடும் என புகார்தாரர் சந்தேகம் கொண்டார். குறிப்பாக, மார்ச் மாதத்தில் அவர் 10,000 வெள்ளி ரொக்கம் காணாமல் போனதால் அவரின் சந்தேகம் மேலும் வலுவடைந்தது என்று நஸ்ருள் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய அப்பெண் இரண்டு முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளதாகக் கூறிய அவர் , குற்றவியல் சட்டத்தின் 380 வது பிரிவின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.








