NATIONAL

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரு வழக்கறிஞர்கள் உள்பட மூவருக்கு சிறை

3 ஏப்ரல் 2024, 2:10 AM
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரு வழக்கறிஞர்கள் உள்பட மூவருக்கு சிறை

கோலாலம்பூர், ஏப் 3 - நான்காண்டுகளுக்கு முன்பு சிவில் வழக்கொன்றில் சாட்சியின் வாக்குமூல அறிக்கையில்   பொய்யான சாட்சியத்தை தாக்கல் செய்தது தொடர்பில் கொண்டுவரப்பட்ட  நீதிமன்ற  அவமதிப்பு வழக்கில் இரு வழக்கறிஞர்கள் உட்பட மூவருக்கு இங்குள்ள  செஷன்ஸ் நீதிமன்றம்  ஏழு நாட்கள் சிறைத்தண்டனை விதித்தது.

மார்க் ராபின் தல்லாலா,  ஜி. மகாதேவா ஆகிய இரு வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது கட்சிக்காரரான ஜக்மோகன் சிங் சந்து ஆகிய மூவரும் நேற்று முதல் தண்டனையை அனுபவிக்க நீதிபதி ஹலிலா சுபோ   உத்தரவிட்டார்.

எனினும்,  இந்த தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு செய்வதற்கு ஏதுவாக சிறைத்  தண்டனையை ஒத்தி வைக்க  மூன்று பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ ஹர்பால் சிங் கிரேவால் செய்து கொண்ட  மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

ஆலன் டேவிட் மார்டினெஸின் சாட்சி வாக்குமூல அறிக்கையின் வடிவத்தில் தவறான ஆதாரங்களைத் தயாரித்து தாக்கல் செய்ததன் மூலம்  நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கத்தை  பிரதிவாதிகள் கொண்டிருந்ததை நீதிமன்றம் கண்டறிந்ததாக ஹலிலா தனது  தீர்ப்பில் கூறினார்.

நேர்மையற்ற சாட்சியங்களையோ அல்லது அறிக்கைகளையோ சமர்ப்பித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தக்கூடாது என்ற தார்மீக பொறுப்பு  நீதிமன்ற அதிகாரிகள் என்ற முறையில் நாம் அனைவருக்கும் உள்ளது. சட்டம் மற்றும் நீதியின் கொள்கைகளின் அடிப்படையில் அந்தந்த கடமைகள் மற்றும் பங்கினை நிறைவேற்றுவதில் நாம் ஒவ்வொருவருக்கும் பெரும் பொறுப்பும் சுமையும் உள்ளது.

வழக்கறிஞர்கள் என்ற முறையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும்  நியாயத்தை  நிலைநாட்டும் பொறுப்பு நீதிமன்றத்திற்கும் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் சாட்சி அறிக்கை வேண்டுமென்றே மற்றும் நேர்மையற்ற முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாட்சி அறிக்கை  மார்டினெஸின் உண்மையான அறிக்கை அல்ல என்று பிரதிவாதிகள் அறிந்திருந்தனர். ஆனினும்,  அவர்கள் (பிரதிவாதிகள் ) இந்த நீதிமன்றத்தை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தினர் என்று அவர் கூறினார்.

இந்த விஷயம் விசாரணைக்கு முன்னர் கவனிக்கப்பட்டு வெளிப்படுத்தப்படாது போயிருந்தால்  குறைபாடுடைய அந்த  அறிக்கை விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டு வழக்கில் நியாயத்தை நிலைநாட்டுவதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று நீதிபதி மேலும் சொன்னார்.

எனவே, மூன்று பிரதிவாதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவது பொருத்தமானது மற்றும் நியாயமானது என்று நீதிமன்றம் நம்புகிறது. அபராதம் என்பது பொருத்தமானதாக இருக்காது. ஏனென்றால் அது குற்றத்தின் தீவிரத்தைப் பிரதிபலிக்காது என்று நீதிபதி ஹலீலா கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.