ad
ACTIVITIES AND ADS

ஏசான் ரஹ்மா விற்பனைக்கு  மக்கள் பேராதரவு இசூவான் காசிம் பெருமிதம்

1 பிப்ரவரி 2024, 9:11 AM
ஏசான் ரஹ்மா விற்பனைக்கு  மக்கள் பேராதரவு இசூவான் காசிம் பெருமிதம்
ஏசான் ரஹ்மா விற்பனைக்கு  மக்கள் பேராதரவு இசூவான் காசிம் பெருமிதம்

செய்தி; சு.சுப்பையா

சுபாங்.பிப்.1- கோத்தா டமன்சாரா சட்டமன்ற தொகுதியில் மாதத்தில் குறைந்தது 3 அல்லது 4 முறை ஏசான் ரஹ்மா விற்பனை சந்தை நடைபெறுகிறது. இதற்கு மக்கள் தொடர்ந்து நல்ல ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எதிர்வரும் காலங்களில் அதிகமானவர்கள் கலந்து பயனடைய வேண்டி ஊக்குவிப்பு செய்யப்படும் என்று இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இசூவான் காசிம் தெரிவித்தார்.

கம்போங் பெக்கான் சுபாங் பொது மண்டபத்தில் ஏசான் ரஹ்மா விற்பனை சந்தை சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த விற்பனை சந்தைக்கு வருகை தந்து பொது மக்களை சந்தித்து குறை நிறைகளை கேட்டு அறிந்துக்கொண்டார்.

இந்த விற்பனை சந்தையில் இந்தியர்களின் பங்கெடுப்பு மிக குறைவாக காணப்பட்டது. இது குறித்து அவரிடம் வினவிய போது, " இந்தியர்கள் வேலைக்கு சென்றிருக்கலாம் " என்று பதில் அளித்தார். மேலும்  கூறிய  அவர், பரவலாக இது போன்ற விற்பனை சந்தைகளில் இந்தியர்களின் பங்கெடுப்பு குறைவாகத்தான் இருக்கிறது.

இந்த திட்டங்கள் இந்தியர்களிடம் சென்றடைய எல்லாத் தரப்பும் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த விற்பனை சந்தையில் ரி.ம. 50.00 செலவில் ஒரு குடும்பத்திற்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கலாம். இந்த அரிய வாய்ப்பை ஏழை இந்திய சமுதாயம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இச்சந்தையில் 5 கிலோ சமையல் எண்ணெய் ரி.ம. 25.00, 5 கிலோ அரிசி ரி.ம. 13.00, 30 கிரேட் பி முட்டைகள் ரி.ம. 10.00, ஒரு பாக்கெட் மீன் ரி.ம. 6.00 என்று குறைந்த விலையில் வசதி குறைந்த மக்களின் வாழ்க்கை செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நல்ல சிந்தனையில் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நடத்தி வருகிறது.

மேலும் மாட்டிறைச்சி, மீன், சீனி, சோஸ் வகைகள், மெகி மீ, ஜூஸ் வகைகளும் இந்த விற்பனை சந்தையில் இடம் பெற்றுள்ளன. அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் வசதி குறைந்தவர்களின் தேவைகளுக்கு ஏற்ப  இத்திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விற்பனை சந்தையை சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் பொறுப்பு ஏற்று சிறப்பாக நடத்தி வருகிறது. காலை 10.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடை பெறுகிறது.

சிலாங்கூரில் பெரும்பான்மையாக சட்ட மன்ற அலுவலத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் , அவர்களின் அலுவலக ஊழியர்கள், நகராண்மை கழக உறுப்பினர்கள், கெ.கெ.ஐ. தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் என்று எல்லாத் தரப்பினரும் இணைந்து இந்த ஏசான் ரஹ்மா விற்பனை சந்தையை சிறப்பாக சிலாங்கூர் முழுவதும் ஏற்பாடு செய்து வருகின்றனர். வசதி குறைந்தவர்களிடம் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.