கோலாலம்பூர், பிப் 1- சிப்பாங்கிலுள்ள பெட்ரோனாஸ் அனைத்துலக
பந்தயத் தடத்தில் கிராண்ட் ப்ரிக்ஸ் (ஜிபி) ஃபோர்முலா 1 (எப்.1)
பந்தயத்தை மீண்டும் நடத்துவது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும்
நடத்தப்படவில்லை என்று பெட்ரோனாஸ் கூறியது.
அனைத்துலக நிலையிலான அந்த கார் பந்தயத்தை எதிர்வரும் 2026ஆம்
ஆண்டில் மீண்டும் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சு
நடத்தப்பட்டு வருவதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் மலேசிய
பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனம் இந்த
விளக்கத்தை அளித்தது.
அந்த கார் பந்தயத்தை மீண்டும் சிப்பாங், பெட்ரோனாஸ் அனைத்துலக
பந்தயத் தடத்தில் நடத்துவது தொடர்பில் எந்த பேச்சுவார்த்தையும்
நடத்தப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்று
பெட்ரோனாஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.








