ஷா ஆலம், 28 பிப்ரவரி: அதிக வருமானம் அல்லது வசதி கொண்ட தரப்பினருக்கு (T20) பெட்ரோல், டீசல் மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றிற்கு மானியம் அளிக்காமல் இருந்திருந்தால் கடந்த ஆண்டு மொத்தம் RM17.8 பில்லியன் சேமிக்கப்பட்டிருக்கும்.
எரிபொருட்களின் பயன்பாடு அதிக வருமானம் கொண்ட பிரிவினர் (35 வீதமாகவும்), குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் (24 வீதமாகவும்) மற்றும் நடுத்தர வருமான பிரிவினர் (41 வீதமாகவும்) உள்ளது என துணை நிதி நிதியமைச்சர் வெளிப்படுத்தினார்.
"எண்களின் அடிப்படையில், T20 தரப்பினரால் அனுபவிக்கப்படும் மானியத்தின் மதிப்பு RM17.8 பில்லியன் ஆகும். இனி T20 தரப்பினர் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி மானியம் பெறாமல் இருந்தால், அரசாங்கம் RM15 முதல் RM17 பில்லியன் வரை சேமிக்கலாம்.
"இதன் வழி, மக்களுக்கு 26 அமைச்சகங்களில் உள்ள பல்வேறு விஷயங்களில் எவ்வளவு உதவ முடியும் என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் கற்பனை செய்து கொள்ளலாம்" என்று டத்தோஸ்ரீ அஹ்மட் மஸ்லான் கூறினார்.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் மொத்த டீசல் மானியம் RM5.8 பில்லியன் முதல் RM6.1 பில்லியன் வரை இருந்தது. ஆனால் பயனர்களின் அதிகரிப்பு காரணமாக மானியம் RM8.4 பில்லியனாக உயர்ந்தது.








