ஷா ஆலம், பிப் 23: ஜூன் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் 6 மாநில சட்டமன்றங்களை (DUN) கலைப்பது குறித்து பரிசீலிக்க ஆறு மாநிலங்கள் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன என்று டத்தோ மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறினார்.
தனது பேஸ்புக் பகிர்வில், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, கோலாலம்பூரில் இன்று தனது சகாக்களுடன் நடந்த சந்திப்பின் போது, ஒரு புரிந்துணர்வு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
“இறைவன் அருளால், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த மாநில அரசர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர் இன்று மதியம் கோலாலம்பூரில் ஒன்றாக தேநீர் அருந்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டோம் என்றார் அவர்.
"சுருக்கமாக, ஜூன் 2023 இன் கடைசி இரண்டு வாரங்களில் அந்தந்த மாநில சட்டமன்றங்கள் கலைக்கப் படுவதைப் பரிசீலிக்க நாங்கள் ஒருமித்த கருத்தை எட்டினோம்," என்று அவர் கூறினார்.
மாட்சிமை மிக்க சுல்தான்கள், யாங் டி பெர்துவான் பெசார் மற்றும் அந்தந்த மாநில கவர்னர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன், கட்சி மட்டத்திலும் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்று அமிருடின் கூறினார்.
"இந்தப் புரிதல் எதிர்காலத்தில் ஜனநாயகத்தை மதிக்கும் மக்களிடையே நம்பிக்கையையும் நன்மதிப்பையும் ஏற்படுத்தும் என்று நம்புவதாக, அவர் கூறினார்.
சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான் மற்றும் திராங்கானு ஆகிய ஆறு மாநிலங்களின் பதவி காலம் ஜூன் - ஜூலை மாதங்களில் முற்று பெறுவதால், இந்தக் காலக் கட்டத்தில், குறிப்பாக ஜூலை மாதத்தில் தேர்தல் நடைபெறும் சாத்தியங்கள் உண்டு எனச் சிலாங்கூர்இன்று அறிகிறது.








