சுபாங் ஜெயா, பிப் 22: இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR) பங்கேற்க ஊக்குவிப்பதற்காகச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Socso) மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படும்.
இந்த திட்டத்தின் மூலம், வீட்டு வேலைகளைச் செய்யும்போது ஏதாவது ஆபத்தைச் சந்தித்தால், சம்பந்தப்பட்டவர் பாதுகாக்கப்படுவார் என்று சிலாங்கூர் பெர்கேசோ இயக்குனர் கூறினார்.
இஸ்மாயில் அபி ஹாஷிம் கூறுகையில், கடந்த ஆண்டு டிசம்பரில் இத்திட்டம் தொடங்கப் பட்டதில் இருந்து, மூன்று உறுப்பினர்கள் இதன் பலன்களைப் பெற்றுள்ளனர்.
"பெட்டாலிங் ஜெயா, தஞ்சோங் காராங் மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களில் இச்சம்பவங்கள் நடந்தன. இந்த இல்லத்தரசிகள் அனைவரும் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். அவர்கள் ஒரு வருடத்திற்கு RM120 பிரீமியத்தை வழங்கியிருந்தனர். அதனால் அவர்கள் உதவி பெற்றனர்.
“அவர்களின் கணவன்மார்களுக்கு 55 வயது வரை மாதந்தோறும் RM300 தொகையை நாங்கள் வழங்குவோம். கணவன் இல்லை என்றால், இளைய குழந்தை 21 வயது ஆகும் வரை இந்த உதவியை பெறும். அதுமட்டுமின்றி இறப்புக்கு RM2,000 அளிக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு விபத்தால் கணவனை இழந்த சித்தி ஜுபைடா ஒமாரிடம் இறுதிச் சடங்குக்கான பணமும் பிரியாதின் பெட்டியும் ஒப்படைக்கப்பட்டது.
பிப்ரவரி 10 அன்று, மனிதவள அமைச்சர் வீ. சிவக்குமார், ஜனவரி மாதம் வரை கிட்டத்தட்ட 150,000 இல்லத்தரசிகள் இத்திட்டத்தில் பங்கு பெற்றதாக தெரிவித்தார்.
இத்திட்டம் இல்லத்தரசிகளுக்கு நிரந்தர ஊனம், மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நலன்கள், நோய்வாய்ப்பட்ட விடுப்பு கொடுப்பனவு, டயாலிசிஸ் உதவி, ஓய்வூதியம் மற்றும் இறப்பு ஆகியவைக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.
55 வயதிற்குட்பட்ட அனைத்து இல்லத்தரசிகள் மற்றும் முழுநேர அல்லது பகுதிநேர குடும்பத்தை நிர்வகிப்பவர்கள், திருமணமானவர்கள் அல்லது தனிமையில் இருப்பவர்கள் 12 மாத காலத்திற்கு RM120 பங்களிப்புடன் திட்டத்தில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள்.








