பத்தாங் காலி, டிச 18- இங்குள்ள ஃபாதர் ஆர்கானிக் ஃபார்ம் தற்காலிக முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்கள் உதவிக் கோரி எழுப்பிய அபயக் குரல் நெஞ்சைப் பதற வைத்ததாக மீட்புப் பணியாளர் ஒருவர் கூறினார்.
அந்த நிலச்சரிவில் 100 பேர் சிக்கியுள்ளனர் என வெளிவந்த தகவலை தொடக்கத்தில் நம்புவதற்கு கடினமாக இருந்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட பொது தற்காப்புப் படையின் அதிகாரி முகமது பிர்டாவுஸ் அப்துல் சமாட் தெரிவித்தார்.
அந்த சம்பவத்தில் சுமார் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொடக்கத்தில் கூறப்பட்டது. 100 பேர் என்பது பெரிய எண்ணிக்கையாகும், ஆகவே அதனை நம்புவதற்கு கடினமாக இருந்தது என்று சம்பவ இடத்திற்கு தொடக்கத்தில் விரைந்த மீட்புப் பணியாளர்களில் ஒருவரான பிர்வுடாவுஸ் சொன்னார்.
கடந்த வெள்ளிக்கிழமை உலு சிலாங்கூர் மாவட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கை அறையில் பணியில் இருந்த போது விடியற்காலை 2.30 மணியளவில் நிலச்சரிவு தொடர்பான 999 அவசர அழைப்பை நாங்கள் பெற்றோம். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 பேர் வரை இருக்கும் என்றத் தகவலை நம்ப முடியாத காரணத்தால் அதனை உறுதிப்படுத்துவதற்காக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை தொடர்பு கொண்டேன்.
சம்பவம் உறுதிப்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து போலீஸ், பொது தற்காப்பு பிரிவு அதிகாரி ஹில்மி ஹூசாம் உள்ளிட்ட ஐவர் நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தோம் என பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தை அடைந்த போது நிலைமை குழப்பம் நிறைந்து காணப்பட்டது. மண் சரிவில் சிக்கியவர்களின் அபயக் குரல் நாலா திசைகளிலிருந்தும் கேட்டது. மீட்பு பணியை மீட்புப் பணியாளர்கள் தொடங்கிய போது பாதிக்கப்பட்ட சிலர் இடிபாடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் டார்ச் விளக்கை ஒளிரவிட்டு உதவிக் கோரி கூச்சலிட்டனர்.
முட்டி அளவுக்கு சகதியில் கால் பதிந்ததாலும் கால் வைக்கும் இடமெல்லாம் மண் வழுக்கியதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடினமாக இருந்தது, அது போக, தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் அபாயத்தையும் எதிர்நோக்கி இருந்தோம் என்றார் அவர்.
மீட்பு பணியில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டு இருந்த போது பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் எங்களை அணுகி என் மனைவியும் பிள்ளையும் காருடன் மண்ணில் புதையுண்டு விட்டனர். அடையாளம் காண்பதற்கு ஏதுவாக அவர்கள் காரின் ஹாரனை தொடர்ந்து அழுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று பதட்டத்துடன் கூறினார்.
மண் குவியலில் சிக்கிக் கொண்டிருந்த கார்களுக்கு மத்தியில் ஹாரன் சத்தம் வந்த காரை தேடும் பணியில் தீவிரமாக ஈடு பட்டோம். சிறிது நேரத்தில் அந்த காரை கண்டுபிடித்து விட்டோம். அந்த காரில் ஒரு பெண்மணியும் பிள்ளையும் இருந்தனர்.
மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்ட அந்த மாது தன் பிள்ளையை முதலில் காப்பாற்றும் படி கூறினார். அந்த பிள்ளையை வெளியில் கொண்டு வருவதற்கு வாரி அணைத்தேன். அந்த கணம் நான் உடைந்தே போனேன். சுவாசம் இல்லை, உடலில் உஷ்ணம் இல்லை. அந்த சிறுவன் இறந்து விட்டிருந்தான் என பிர்டாவுஸ் கூறினார்.
எந்த சூழ்நிலையிலும் பணி நிபுணத்துவத்தோடும் உணர்ச்சிக்கு ஆட்படாமலும் செயல்பட வேண்டும் என்பதை பொது தற்காப்பு படையில் எனக்கு 17 ஆண்டு கால அனுபவம் போதித்துள்ளது, ஆகவே மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த மாதுவையும் அவரின் பிள்ளையையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தேன் என்று அவர் சொன்னார்.







