ஷா ஆலம், டிச 5- நாட்டிலுள்ள மூன்று மாநிலங்கள் தொடர்ந்து வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி சிலாங்கூர், பேராக் மற்றும் பெர்லிசில் உள்ள ஆறு துயர் துடைப்பு மையங்களில் 114 குடும்பங்களைச் சேர்ந்த 405 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
இதனிடையே, சிலாங்கூரில் நேற்றிரவு 151ஆக இருந்த துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை இன்று காலை 139 ஆக குறைந்துள்ளது. இவர்கள் அனைவரும் இரு துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் டிங்கில், சீன ஆரம்ப ப் பள்ளியிலும் கம்போங் புக்கிட் சங்காங் சமூக மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஸ்மார்ட் சிலாங்கூர் நடவடிக்கை மையத்தின் அகப்பக்கம் கூறியது.
இதனிடையே, பேராக் மாநிலத்தில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் 262 பேர் தங்கியுள்ள வேளையில் பெர்லிஸ் மாநிலத்தில் புதிதாக ஒரு துயர் துடைப்பு மையம் திறக்கப்பட்டு நால்வர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது.
இன்று மாலை தொடங்கி இரவு வரை தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.








