ஷா ஆலம், நவ 23- அண்மையில் நடந்து முடிந்த 15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாநில சட்டமன்றம் வாழ்த்துகளைக் தெரிவித்துக் கொண்டது.
இன்று காலை இங்கு மாநில சட்டமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான மூன்றாம் கூட்டத் தொடர் தொடங்கிய போது சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் தனது சுருக்கமான உரையில் அந்த ஐந்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, வீ.கணபதி ராவ், ரோட்சியா இஸ்மாயில், முகமது சானி ஹம்சான் மற்றும் டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரிக்கு வாழத்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் கோம்பாக் தொகுதியில் மூன்று தவணைகள் உறுப்பினராக இருந்த டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியைத் தோற்கடித்து டத்தோஸ்ரீ அமிருடின் வாகை சூடினார்.
பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரான ரோட்சியா அம்பாங் தொகுதியிலும் கோத்தா கெமுனிங் உறுப்பினர் வீ.கணபதிராவ் கிள்ளான் தொகுதியிலும் டெம்ப்ளர் உறுப்பினரான முகமது சானி உலு லங்காட் தொகுதியிலும் சிஜங்காங் உறுப்பினரான டாக்டர் யூனுஸ் கோல லங்காட் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.








