கிள்ளான்.நவ.9 - கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் இம்முறை 7 முனை போட்டி நிலவுகிறது. 7 முனை போட்டியாக இருந்தாலும் நம்பிக்கை கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் இடையில் தான் பலத்த போட்டி நிலவுகிறது. எது எப்படி இருப்பினும் வெற்றியை நோக்கி கணபதி ராவ் பீடு நடை போடுகிறார் என்றால் அது மிகையாகாது.
இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி, பக்காத்தான் நேஷனல் வாரிசான், பி.ஆர்.எம் மற்றும் 2 சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர். கிள்ளான் நாடாளுமன்ற தொகுதிக்குள் கிள்ளான் துறை முகம், பண்டமாரன், பண்டார் கிள்ளான் ஆகிய மூன்று சட்ட மன்றங்கள் உள்ளன. இத்தொகுதிகள் அனைத்தும் நம்பிக்கை கூட்டணி கைவசம் உள்ளன. மேலும் கிள்ளான் தொகுதியில் கடந்த 3 தவணையாக ஜ.செ.க.வின் கோட்டையாக உள்ளது. சார்ல்ஸ் சந்தியாகோ 3 தவணையாக இத்தொகுதியை நமது கோட்டையாக வைத்திருந்தார்.
கிள்ளான் தொகுதியில் மொத்தம் 207,000 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இதில் 70,000 புதிய வாக்காளர்களும் அடங்குவர். இம்முறை மக்கள் நம்பிக்கை கூட்டணிக்கு பெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர். நாடு தழுவிய அளவில் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இளம் புதிய வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். புதிய வாக்காளர்களின் ஆதரவுடம் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இத்தொகுதியில் வெற்றி பெறுவேன் என மிகுந்த நம்பிக்கையோடு கிள்ளான் வேட்பாளர் கணபதி ராவ் தெரிவித்தார்.







