கோம்பாக், நவ 6- பன்னிரண்டு ஆண்டுகளாக குடியிருப்பாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கம்போங் சுங்கை சாலாக் இரண்டாவது பால நிர்மாணிப்பு பிரச்னைக்கு தீர்வு காண்பதில் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பெரிதும் துணை புரிந்துள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1,000 குடியிருப்பாளர்கள் கோம்பாக் ஆற்றைக் கடந்து பிரதான சாலைக்குச் செல்வதற்கு ஒரு பாலத்தை மட்டுமே பயன்படுத்தி வந்ததால் ஏற்பட்ட நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்த இரண்டாவது பாலம் பெரிதும் உதவியாக உள்ளது.
அப்பகுதியில் உள்ள ஒரே பாலத்திலும் 2 டன்னுக்கும் குறைவான எடை கொண்ட வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதால் அவசர காலங்களில் தீயணைப்பு வண்டிகள் போன்றவை உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டதாக கம்போங் சுங்கை சாலாக் குடியிருப்பாளர் சங்கத் தலைவர் ஹலிமி ஜக்காரியா கூறினார்.
இவ்விவகாரத்திற்கு தீர்வு காண கடந்த 2010 ஆம் ஆண்டில் அப்போது மத்திய அரசை ஆண்டு வந்த அரசியல் கட்சியை அணுகினோம். எனினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அவர் சொன்னார்.
“ஓடிப்போன ஒய்.பி.“யிடமும் இந்த பிரச்சனையை கொண்டுச் சென்றோம். அவரும் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை என்றார் அவர்.
“ஓடிப்போன அந்த ஒய்.பி.“ யார் என்று ஹலிமி கூறாத போதிலும் கடந்த 2020ம் ஆண்டு கெஅடிலான் கட்சியிலிருந்து விலகி பெர்சத்து கட்சிக்குத் தாவிய கோம்பாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியை அவர் சுட்டிக்காட்டுவதாக கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மந்திரி புசார் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உதவி நாடினோம் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் பொறுப்பை கோம்பாக் செத்தியா தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரஹிம் காஸ்டிக்கு வழங்கினார்.
பாலத்தை நிர்மாணிக்க 500,000 வெள்ளி ஒதுக்கப்ப்படுவதாக மந்திரி புசார் கடந்தாண்டு அறிவித்தார். கடந்த மாதம் திறக்கப்பட்ட இப்பாலம் பொது மக்களின் போக்குவரத்தை எளிதாக்கியுள்ளது என்றார் அவர்.








