கோம்பாக், நவ 6- இம்மாதத்துடன் நிறைவுக்கு வரவிருந்த மாநில அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனைத் திட்டம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வினால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தை மேலும் தொடர முடிவெடுக்ப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிடின் ஷாரி கூறினார்.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்காக கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளோம். அதில் ஒரு பகுதியை மாநில அரசின் துணை நிறுவனமான சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் ஏற்றுக் கொள்ளும் என்று அவர் சொன்னார்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு முழு கோழி 10.00 வெள்ளிக்கும் உறைய வைக்கப்பட்ட மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் சமையல் எண்ணெய் (5 கிலோ) 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 6 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட இந்த மலிவு விற்பனைக்கு மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியிருந்தது. இந்த விற்பனை மாநிலத்தின் 56 தொகுதிகளில் உள்ள தேர்தெடுக்கப்பட்ட 160 இடங்களில் நடத்தப்பட்டது.
வரும் பொதுத் தேர்தலில் மத்திய அரசை ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் மாநில அரசின் இந்த மலிவு விற்பனை திட்டத்தின் நுணுக்கங்களை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள தாங்கள் தயாராக உள்ளதாக அவர் அமிருடின் சொன்னார்.
ஜிஹாட் சிறப்புக் குழு உள்பட பல்வேறு செயல்குழுக்களை உருவாக்கிய போதிலும் மக்களுக்கு பெரும் சுமையாக இருந்து வரும் வாழ்க்கை செலவின அதிகரிப்பை கட்டுப்படுத்துவதில் புத்ராஜெயா தோல்வி கண்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.








