ஷா ஆலம், நவ 6- தேர்தல் பிரசாரத்தின் போது இன விவகாரங்களை எழுப்ப வேண்டாம் என கோம்பாக் தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் நினைவுறுத்த பட்டுள்ளது.
ஹராப்பான் வேட்பாளரான டத்தோஸ்ரீ அமிடின் ஷாரி உயர்நெறி, நேர்மை மற்றும் உயரிய கோட்பாடுகளுடன் பிரசாரத்தை மேற்கொள்வதோடு துல்லியமான மற்றும் சமீபத்திய தகவல்களை தனது வாதத்தில் முன்வைப்பதாக கோம்பாக் ஹராப்பான் பிரசார செயலகம் கூறியது.
இன்று தொடங்கி வரும் நவம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் பிரசாரத்தின் பொது மற்ற வேட்பாளர்களும் இதே பாணியில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கை ஒன்றில் அது வலியுறுத்தியது.
பல்வேறு இனங்களுக்கிடையிலான பன்முகத்தன்மை கோம்பாக்கை நாட்டின் சக்தி வாய்ந்த மையமாக உருவாக்கியுள்ளது என்று அமிருடின் கூறினார்.
நாட்டில் குறிப்பாக சிலாங்கூரில் இவ்வளவு காலமாக அமைதியுடனும் சுபிட்சத்துடனும் வாழ்ந்து வரும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இன விவகாரங்களை எழுப்புவதை சம்பந்தப்பட்ட தரப்பினர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இத்தொகுதியில் அமிருடின் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். இந்த தொகுதியில் அவருக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வேட்பாளராக பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த அஸ்மின் அலி கருதப்படுகிறார்.








