ECONOMY

சிலாங்கூரில் வாக்காளர்கள் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரிப்பு

1 நவம்பர் 2022, 4:40 AM
சிலாங்கூரில் வாக்காளர்கள் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரிப்பு

ஷா ஆலம்,  நவ 1 - சிலாங்கூரில் 15வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உள்ள பதிவு பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 52.28 சதவீதம் அதாவது 12 லட்சத்து 62 ஆயிரத்து 774 பேராக உயர்ந்துள்ளது. இதன் வழி கடந்த 14வது பொதுத் தேர்தலின் போது 24 லட்சத்து 15 ஆயிரத்து 044 ஆக இருந்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 36 லட்சத்து 77 ஆயிரத்து 848 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மிகப்பெரிய வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அரசு பதிவேட்டில் இடம் பெற்றதாக கூறிய சிலாங்கூர் மாநில தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குநர் கமாருள் அஸ்மான் அகமது சப்ரி,18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் அனுமதி மற்றும் இயல்பாக வாக்காளராகும் நடைமுறை ஆகியவை இந்த எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாக விளங்குவதாக  சொன்னார்.

வரும் 15வது பொதுத் தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான பதிவு பெற்ற வாக்காளர்களைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் உருவாகியுள்ளது என்று  நேற்று  ஊடகப் பணியாளர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

மொத்த மாநில வாக்காளர்களில் 36 லட்சத்து 52 ஆயிரத்து 790 பேர் சாதாரண வாக்காளர்களாவர்.  ஆயுதப்படைகளுக்கான ஆரம்ப வாக்காளர்கள் (7,468), காவல் துறை (16,779) மற்றும் வெளிநாட்டில் இருந்து வராத வாக்காளர்கள் (811) பேராக உள்ளனர்.

வயது அடிப்படையில், மாநிலத்தில் 21-59 வயதுடைய வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 5 ஆயிரத்து 596 ஆக அல்லது 76.29 விழுக்காடாக உள்ளது. மூத்த குடிமக்கள் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட 598,549 பேரும், 18 முதல் 20 வயதுடைய இளைஞர்கள் சுமார் 273,7044 பேரும் வாக்காளர்களாகப் பதிவு பெற்றுள்ளனர் என்று கமாருல் அஸ்மான் கூறினார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில்  35,000 பேராக இருந்த தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 15வது பொதுத் தேர்தலில்  56,707 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.