கிள்ளான், அக் 31- கிள்ளான் நகராண்மைக் கழகம் வரும் நவம்பர் மாதத்தில் கூடுதல் முகப்பிடங்களையும் பேரங்காடிகளில் நடமாடும் அலுவலகங்களையும் ஏற்பாடு செய்யவுள்ளது.
பொது மக்கள் 2023 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு வரியை செலுத்துவது, வர்த்தக மற்றும் விளம்பர அனுமதிகளை புதுப்பிப்பது போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ளும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.
பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் மதிப்பிட்டு வரி அல்லது வர்த்தக அனுமதியை புதுப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.
இன்று நடைபெறும் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் கூட்டத்தையொட்டி வழங்கிய செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கூடுதல் முகப்பிடங்கள் ஏயோன் பிக் காப்பார் (5 மற்றும் 6 நவம்பர்), ஜி.எம். கிள்ளான்(12 மற்றும் 13 நவம்பர்), ஏயோன் புக்கிட் ராஜா (26 மற்றும் 27 நவம்பர்) ஆகிய இடங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
கிள்ளான், தாமான் செந்தோசா என்.எஸ்.கே. பேரங்காடியில் 12 மற்றும் 13 ஆம் தேதிகளிலும் பண்டமாரான் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 26 மற்றும் 27 ஆம் தேதியும் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை முகப்பிடங்கள் செயல்படும்.







