சிப்பாங், அக் 31- ஆறு மாதங்களுக்கும் மேலாக வருமானம் இன்றி
அவதியுற்று வந்த கறவை மாட்டு பண்ணை உரிமையாளரான ஆர்.
ராஜலிங்கம் (வயது 63) மாநில அரசின் உபகரண உதவியால் தனது
பண்ணைத் தொழிலை மீண்டும் நடத்த தொடங்கியுள்ளார்.
கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அரைவை இயந்திரம், பால்
கறக்கும் இயந்திரம் நீர் இறைக்கும் பம்ப் இயந்திரம் போன்றவை
மோசமாக சேதமுற்றதாக டிங்கில், கம்போங் ஸ்ரீ தஞ்சோங்கை
சேர்ந்தவரான ராஜலிங்கம் கூறினார்.
இந்த உபகரணங்களை பெறுவதற்கு தாம் செய்த விண்ணப்பத்தை மாநில
அரசு ஏற்றுக் கொண்டது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளக்கிறது என்று
பெருமிதம் பொங்க அவர் தெரிவித்தார்.
நான் பல ஆண்டுகளாக கறவை மாடுகளை வளர்க்கும் தொழிலில்
ஈடுபட்டு வருகிறேன். வெள்ளத்தில் எனது உபகரணங்கள சேதமடைந்து
விட்டதால் தொழிலை நடத்துவது மிகவும் சிரமமானதாக ஆனது. இதன்
காரணமாக பண்ணைத் தொழிலை சிறிது காலத்திற்கு நிறுத்தி
வைத்திருந்தேன்.
அந்த உபகரணங்களை வாங்குவதற்கு தேவைப்படும் ஆயிரணக்கானக்கான
வெள்ளி என்னிடம் இல்லை. இந்த சமயத்தில்தான் கிராமத் தலைவரும்
பெங்குளுவும் எனது பண்ணைக்கு வந்து நிலைமையை நேரில் கண்டனர்.
அதன் பின்னர் உபகரண உதவிக்கு விண்ணப்பம் செய்யும்படி அவர்கள்
எனக்கு ஆலோசனை கூறினர். எனது விண்ணப்பம் அவ்வளவு சீக்கிரத்தில்
அங்கீகரிக்கப்படும் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த
உதவியை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
என அவர் சொன்னார்.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான ராஜலிங்கம் 28 கறவை மாடுகளை
வளர்த்து வருகிறார்.
சிலாங்கூர் சிறு தொழில்முனைவோர் நிதியின் வாயிலாக உதவி பெற்ற
ஐவரில் ராஜலிங்கமும் ஒருவராவார். நேற்று சிப்பாங்கிலுள்ள கேஐபி மால்
கோத்தா வாரிசானில் நடைபெற்ற மாவட்ட நிலையிலான ஜெலாஜா
சிலாங்கூர் பெனயாயாங் நிகழ்வில் இந்த உதவிப் பொருள்களை மந்திரி
பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சம்பந்தப்பட்டவர்களிடம்
ஒப்படைத்தார்.








