கோலாலம்பூர், அக் 11- நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பதினான்காவது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான மூன்றாம் கூட்டத் தொடர் நேற்று முதல் ரத்து செய்யப்ட்டது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட காரணத்தால் சிறப்பு அமர்வு, தேர்வுக் குழு கூட்டம் மற்றும் சிறப்புத் தேர்வுக் குழு கூட்டம் ஆகியவையும் ரத்து செய்யப்படுவதாக மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ அஸார் அஜிசான் கூறினார்.
அக்டோபர் மாதம் 10ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் அரசியலமைப்புச் சட்டத்தின் 55வது ஷரத்தின் உட்பிரிவு 2இன் கீழ் மாட்சிமை தங்கிய மாமன்னர் கையெழுத்திட்ட பிரகடனத்தை நான் பெற்றேன்.
இதனைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான பணிகளைப் மேற்கொள்ளும் பொறுப்பினை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளும் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
முன்னதாக, நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ இஸமாயில் சப்ரி யாக்கோப் தொலைக்காட்சி வழி மக்களுக்கு ஆற்றிய சிறப்பு உரையின் வாயிலாக வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான மூன்றாம் கூட்டத் தொடர் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி 32 நாட்களுக்கு நடைபெற திட்டமிட்டப்பட்டிருந்தது. இந்த கூட்டத் தொடரின் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.








