கிள்ளான், அக் 10- தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்காக சுமார் பத்து லட்சம் ரிங்கிட் நிதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச பள்ளி பேருந்து கட்டணத்தின் வழி இவ்வாண்டு 3,169 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்திய மாணவர்கள் கல்வி பெறுவதில் நிதிப் பிரச்னை ஒருபோதும் இடையூறாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த உதவித் திட்டம் அமல்படுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வோரு மாணவருக்கும் தலா 300 ரிங்கிட் வழங்கப்படுகிறது. இந்த நிதியை பகிர்ந்தளிக்கும் பணி முற்றுப் பெற்று விட்டது. குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
ஐ.சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் இலாகா ஏற்பாட்டில் இங்குள்ள லிட்டில் இந்தியா, டத்தாரான் செட்டியில் நடைபெற்ற இந்திய தொழில்முனைவோர் விற்பனை பெருவிழாவை நிறைவு செய்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள 97 தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவ அண்மைய சில ஆண்டுகளாக மாநில அரசு வருடாந்திர மானியமாக 50 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.
மாநில அரசின் உதவி பெறாத பள்ளிகள் என்று இங்கு எதுவும் கிடையாது. கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக நாங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் நிதியை பகிர்ந்தளிக்கிறோம் என்றார் அவர்.
மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு மாநில அரசு 2 கோடியே 65 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக அமிருடின் கடந்த மே மாதம் கூறியிருந்தார்.








