ECONOMY

இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் ரி.ம.30 லட்சம் ஒதுக்கீடு- மந்திரி புசார் தகவல்

10 அக்டோபர் 2022, 4:15 AM
இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் ரி.ம.30 லட்சம் ஒதுக்கீடு- மந்திரி புசார் தகவல்

கிள்ளான், அக் 10- இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆண்டுதோறும் தலா 30 லட்சம் ரிங்கிட்டை சிலாங்கூர் மாநில அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.

தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக தாம் பதவி வகித்த காலந்தொட்டு இப்போது வரை அமல்படுத்தப்பட்ட திட்டங்களின் வழி பல இந்திய தொழில்முனைவோர் உருவாகியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இன்று நாம் பெரும் எண்ணிக்கையிலான தொழில்முனைவோர்களை ஒன்று திரட்டியுள்ளோம். இந்த வணிகர்கள் எவ்வாறு உருவானார்கள்? நாம் வழங்கிய நிதி ஒதுக்கீடுதான் அவர்களின் உருவாக்கத்திற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

நமது திட்டங்களில் லாபம் சம்பாதிக்க க்கூடிய இடைத்தரகர்கள் கிடையாது. தயார் செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் மூலம் யாரும் பணக்காரர்கள் ஆனது கிடையாது. இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி யாவும் இந்தியர்களுகே சென்று சேர்ந்தது என்று அவர் சொன்னார்.

ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர்  மேம்பாட்டு இலாகா ஏற்பாட்டிலான தீபாவளி விற்பனை பெருவிழாவை நிறைவு செய்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிள்ளான், லிட்டில் இந்தியாவில் உள்ள டத்தாரான் செட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த விற்பனை பெரு விழா நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இதனிடையே, இந்த ஐ.சீட் வர்த்தக உபகரண உதவித் திட்டம் இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வாயிலாக தரம் உயர்த்தப்படவுள்ளதாகவும் அமிருடின் இந்நிகழ்வில் தெரிவித்தார்.

ஈராண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த ஐ-சீட் திட்டத்தின் வாயிலாக இதுவரை 400 இந்திய தொழில்முனைவோர் பயன்பெற்றுள்ளனர். எதிர்காலத்திலும் இத்திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.