உலு சிலாங்கூர், செப் 28. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது வருமானத்திற்கு அடித்தளமாக இருந்த வான்கோழி வளர்ப்புத் தொழிலை மீண்டும் மேற்கொள்வதற்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி பெசார் (ஒருங்கிணைக்கப்பட்ட) கழகம் வழங்கிய நிதியுதவி பெரிதும் துணை புரிந்ததாக முதியவர் கே. தனமலை (வயது 73) பெருமிதம் பொங்க கூறினார்.

கடந்த மே மாதம் 16 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் தாம் வளர்த்து வந்த 26 வான்கோழிகளும் கூண்டோடு அடித்துச் செல்லப்பட்டதாக கம்போங் கெர்லிங்கில் வசிக்கும் அவர் சொன்னார்.
நல்வாய்ப்பாக எம்.பி.ஐ. வழங்கிய 300 வெள்ளி உதவித் தொகையைக் கொண்டு வான்கோழி குஞ்சுகளை வாங்கி மீண்டும் வளர்க்கவிருக்கிறேன். இனி வான்கோழி வளர்ப்பதில்லை என்று முன்பு முடிவு செய்திருந்தேன். ஆனால், இதை விட்டால் செய்வதற்கு எனக்கு வேறு வேலை கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு வான் கோழிக் குஞ்சின் விலை தவிடு உள்பட 15.00 முதல் 17.00 வெள்ளியாகும். இத்தொகையைக் கொண்டு 20 குஞ்சுகள் வரை வாங்கலாம். கூண்டு அமைப்பதற்கு தேவையான பொருள்கள் ஏற்கனவே என்னிடம் உள்ளன என்றார் அவர்.
நேற்று கெர்லிங் கம்போங் ஜாவா பாலாய் ராயாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கோல குபு பாருவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 146 பேருக்கு எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் தலா 300 வெள்ளி உதவி நிதியை வழங்கினார்.
இதனிடையே, வெள்ளம் காரணமாக தனது வீட்டில் சில குறைபாடுகள் இன்னும் காணப்பட்டாலும் மாநில அரசு சார்பில் வழங்கப்பட்ட இந்த நிதியை அவசரத் தேவைக்கு பத்திரப்படுத்தி வைக்கப் போவதாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான நுர் பத்திஹா ஷியாசினா (வயது 23) கூறினார்.







