ECONOMY

கிள்ளானில் வெள்ளம்- 18 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்

28 செப்டெம்பர் 2022, 12:47 PM
கிள்ளானில் வெள்ளம்- 18 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்

ஷா ஆலம், செப் 28- கிள்ளானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் சுங்கை சீரே தம்பாஹான் 2, நுருள் உலு சூராவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக  நிவாரண மையத்தில் இன்று காலை அடைக்கலம் புகுந்தனர்.

ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் அடங்கிய அந்த வெள்ள அகதிகளை பதிவு செய்து தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தரும் பணியில் சமூக நல இலாகா ஈடுபட்டு வருவதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி ஷாமான் ஜலாலுடின் கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் அருகிலுள்ள உறவினர்கள் தற்காலிகமாக தங்கியுள்ளனர். மேலும் சிலர் பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேற வில்லை என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கம்போங் சுங்கை சீரே தம்பஹான் மற்றும் கம்போங் டேலேக் ஆகிய கிராமங்களில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதோடு காலை 10.30 மணி முதல் வெள்ளம் வடியத் தொடங்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று முதல் ஏற்பட்டு வரும் கடல் பெருக்கு காரணமாக உண்டான திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக இரு தற்காலிக நிவாரண மையங்களை கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழு அமைந்துள்ளது.

கடந்த புதன்கிழமை கடல் அலைகள் 5.4 மீட்டர் வரை உயர்ந்த வேளையில் இன்று 5.3 மீட்டர் வரை அலைகள் மேல் எழும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தாமான் செலாட் டாமாய், தாமான் தெலுக் கெடோங் இண்டா, தோக் மூடா மீனவர் படகுத் துறை ஆகிய பகுதிகளை அதிகாரிகள் அணுக்கமாக கண்காணித்து வருகின்றனர்.

இது தவிர, கோல லங்காட் மாவட்டத்தின் பந்தாய் கெலானாங், பந்தாய் பாரு மோரிப், பந்தாய் மோரிப், பந்தாய் பத்து லாவுட், பந்தாய் சூனாங், தஞ்சோங் சிப்பாட் படகுத் துறை ஆகிய பகுதிகளும் கண்காணிக்கப்படுகின்றன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.