மலாக்கா, செப் 28- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 400 வெள்ளியை லஞ்சமாகப் பெற்ற குற்றத்திற்காக மலாக்கா மாநில தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவன (ஏ.ஏ.டி.கே.) முன்னாள் இயக்குநர் ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 3,000 வெள்ளி அபராதம் விதித்தது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று முகமது யூசுப் காமே (வயது 55) என்பவருக்கு எதிரான தீர்ப்பில் நீதிபதி எலிசபெத் பாயா வான் கூறினார். எனினும், முகமது யூசுப் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தினார்.
முன்னதாக, அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்வதற்கு கைமாறாக புட்யாரிப் ரஹ்மாட் என்பவரிடமிருந்து 400 வெள்ளியை ரொக்கத் தொகையாக லஞ்சமாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார்.
கடந்த 2018 அம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி மலாக்கா மாநில தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவன அலுவலகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக முகமது யூசுப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 165 வது பிரிவின் கீழ் மாற்றுக் குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்கியிருந்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் நுர் ஷகிலா யாக்கோப் வழக்கை நடத்திய வேளையில் முகமது யூசுப்பை பிரதிநிதித்து வழக்கறிஞர் டத்தோ நரன் சிங்க ஆஜரானார்







