ஷா ஆலம், செப் 28- வடகிழக்கு பருவமழை மற்றும் கடல் பெருக்கு காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக சமூக நல இலாகாவின் கண்காணிப்பில் செயல்படகூடிய 151,000 பேர் தங்கும் வசதி கொண்ட 796 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தேவையின் அடிப்படையில் எந்நேரமும் செயல்படுவதற்குரிய தயார் நிலையில் அந்த தற்காலிக நிவாரண மையங்கள் உள்ளதாக சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் அலுவலகத்தின் சேவை நிர்வாகப் பிரிவு செயலாளர் முகமது ஷா ஓஸ்மின் கூறினார்.
மாநிலம் முழுவதும் உள்ள அந்த நிவாரண மையங்கள் அந்தந்த இடத்தின் தேவையைப் பொறுத்து பெரியது, நடுத்தரம் மற்றும் சிறியது என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
இந்த மையங்களில் 151,000 பேர் வரை தங்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவை விரைந்து திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் ஜூப்ளி பேராக் அரங்கில் இன்று நடைபெற்ற வெள்ளப் பேரிடர் மாதிரிப் பயிற்சியின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உலு லங்காட், கோல சிலாங்கூர், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் இருக்கும் 12 தற்காலிக நிவாரண மையங்களில் நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் மூலம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அவற்றுக்கு தலா 20,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
சிலாங்கூரிலுள்ள ஒன்பது மாவட்டங்களில் எட்டு வெள்ள அபாயத்தை அதிகம் கொண்டுள்ளதாக நட்மா தெரிவித்துள்ளது.








