ஜோகூர் பாரு, செப் 4- இங்குள்ள கம்போங் டத்தோ சுலைமான் மெந்திரி, ஜாலான் பூங்கா ராயா பெசாரில் இரு சகோதரர்களின் உயிர்களைப் பறித்த தீவிபத்திற்கு சதிநாசச் செயல் காரணமல்ல என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆகவே, பெற்றோர்கள் வீடுகளில் பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்யும் அதே வேளையில் மின்சார சாதனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருள் ஜமான் மாமாட் ஆலோசனை கூறினார்.
நேற்றைய தீவிபத்தை நாம் படிப்பினையாக கொள்ள வேண்டும். இச்சம்பத்தில் குற்றத்தன்மை இருக்கும் சந்தேகத்தின் பேரிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எனினும் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்றும் நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.
இத்தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவித் தொகையை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார். மாநில துணைப் போலீஸ் தலைவர் டத்தோ காக் கோக் சின்னும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் முகமது ஸ்ப்ரான் முகமது பிக்ரி (வயது 3) மற்றும் நுருள் ஹவா ஜப்பிரா முகமது பிக்ரி (வயது 2) ஆகியோர் வீட்டின் அறையில் உடல் கருகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர்.








