கோலாலம்பூர், நவ, 18- மதுபானப் பொருட்கள் மீதான கலால் வரி வசூலை ஒருங்கிணைந்த நிதியில் இருந்து பிரிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று துணை நிதியமைச்சர் II யாமானி ஹபீஸ் மூசா தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் சொன்னார்.
தற்போது, மோட்டார் வாகனம், சிகரெட் மற்றும் புகையிலை, இனிப்பு பான பொருள்களுக்கான கலால் வரி மற்றும் மதுபான பொருள்களுக்கான கலால் வரி ஆகியவை ஒருங்கிணைந்த நிதியில் சேர்க்கப்படுவதோடு அந்நிதி அரசாங்க செலவினங்களை ஈடுகட்ட பயன்படுத்தப்படுகிறது மக்களவையில்ல் கேள்வி நேரத்தின் போது அவர் கூறினார்.
ஒருங்கிணைந்த நிதியில் இருந்து மதுபான வரி வருமானத்தை தனியாகப் பிரித்து முஸ்லிமல்லாதவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? என புக்கிட் மெர்தாஜம் பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் சிம் சீ கியோங் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த 2010 முதல் 2021 செப்டம்பர் வரை மதுபானப் பொருள்கள் மூலம் மொத்தம் 2,011 கோடி வெள்ளியை அரசாங்கம் கலால் வரியாக வசூலித்துள்ளது. மதுபான பொருள்களுக்கு விதிக்கப்படும் கலால் வரி மூலம் அரசங்கத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு சராசரி 1,680 கோடி வெள்ளி கிடைக்கிறது.
கலால் வரி வசூல் என்பது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான மதுபானங்களையும் உள்ளடக்கியுள்ளது.








